சென்னை:சேவை வரி விதிப்பை எதிர்த்து, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தன் இசை படைப்புகளுக்கு, சேவை வரியாக, 6.79 கோடி ரூபாய் செலுத்தும்படி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான கமிஷனர், 2019ல் உத்தரவு பிறப்பித்தார்.
இதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ரஹ்மான் வழக்கு தொடர்ந்தார். படைப்புகளின் பதிப்புரிமை, படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால், தனக்கு வரி விதிப்பது சட்டவிரோதமானது என, ரஹ்மான் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு, ஜி.எஸ்.டி., கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு முறைப்படி 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரித் துறையில் மேல்முறையீடு செய்ய, வழிவகை உள்ளது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் கூறப்பட்டது.
மனுவை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். 'மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல; கமிஷனரின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் முறையிடலாம்' என அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல், சேவை வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கோரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு அனுப்பிய நோட்டீசை எதிர்த்தும், வழக்கு தொடரப்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனிதா சுமந்த், நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, ஜி.வி.பிரகாஷுக்கு உத்தரவிட்டார்.