சென்னை:வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்துள்ள நிலையில் இன்று, தமிழகத்தின் நான்கு மாவட்டங்களின் சில இடங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளிட்ட அறிக்கை:
வங்கக் கடலில், சில நாட்களாக நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை, இலங்கையில் திரிகோணமலை - மட்டக்களப்பு இடையே கரையை கடந்தது. இது, தொடர்ந்து தென்மேற்கு திசையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.