கோவை:காரமடை நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டங்களால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை நகராட்சியில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான வணிக கட்டடங்களுக்கு குறைந்தளவு சொத்து வரி நிர்ணயித்து, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முறைப்படுத்தாமல், சொத்து வரி விதிப்பதால், இழப்பு ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜெயபிரசாந்த் என்பவர், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவத்துக்கு புகார் அனுப்பினார். இதற்கு விளக்கம் கேட்டு, முறைமன்ற நடுவம், காரமடை நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இரு தரப்பிலும் விசாரணை நடத்திய பின், காரமடை நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாகவும், கூடுதலாகவும், விதிமீறி கட்டிய கட்டடங்களை, அங்கீகரித்த வரைபடத்தின் படி மாற்றியமைக்கவும், இடித்து அகற்றவும், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் - 1920, பிரிவு 206 (1) மற்றும் (2)ன் கீழ் நகராட்சியால் நோட்டீஸ் வழங்காமல் இருப்பதையும், மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும், முறைமன்றம் வன்மையாக கண்டித்தது.
முறைமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
சம்பந்தப்பட்ட முன்னாள், இன்னாள் ஆணையர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். வீதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், கடமை தவறிய காரமடை நகராட்சி ஆணையாளர், நகரமைப்பு அலுவலர்கள், களப்பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
காரமடை நகராட்சியில் சொத்து வரி விதிக்கப்படாத, விதி மீறி மற்றும் அனுமதியற்ற கட்டடங்களை கண்டறிந்து மூன்று மாதங்களுக்குள் உரிய விதிகளின் கீழ், சொத்து வரி விதிக்கும் பணியை முடித்து, அதன் அறிக்கையை, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
இவவாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் ஜெயபிரசாந்த் கூறுகையில், ''காரமடை நகராட்சியில் உள்ள, விதிமீறல் கட்டடங்களால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்றம் இரு தரப்பிலும் விசாரித்து, தவறு நடந்திருப்பதை உறுதி செய்துள்ளது.
அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, அலட்சியத்தை கண்டறிந்துள்ள முறை மன்றம், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், வீதிமீறல் கட்டடங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் வரி விதிக்கவும் உத்தரவிட்டது. காலக்கெடு முடிந்தும், நகராட்சி அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்,'' என்றார்.
காரமடை நகராட்சி ஆணையாளர் பால்ராஜிடம் கேட்டதற்கு, ''விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக, முறைமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து விட்டோம்,'' என்றார்.