சென்னை:''ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மனிதநேயம் மற்றும் செயல் திறன் அவசியம்: இரண்டில் எது இல்லையென்றாலும், அவர்கள் தகுதியை இழந்து விடுவர்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் பேசினார்.
'அஸ்பயர்' கல்வி நிறுவனம் சார்பில், அரசியலில் சாதிக்க நினைப்போருக்காக, 'தலைவா' பயிலரங்க நிகழ்ச்சி, நேற்று துவங்கி, நாளை வரை சென்னையில் நடக்கிறது. பயற்சி ஒருங்கிணைப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன், இதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
வதந்தி
இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து, நிதியமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
அரசியல் முன் அனுபவம் இல்லாமல், 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது, அதில், முதன்முறையாக வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினரானேன். தொடர்ந்து, இரண்டாவது முறையாக, 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, முதன்முறையாக அமைச்சராக உள்ளேன்.
மிக முக்கியமான நிதித் துறை எனக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிதியமைச்சர்கள், மிக மூத்த தலைவர்களாகவும், கட்சியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தலைவர்களாகவும் உள்ளனர்.
ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இந்த பொறுப்பை எனக்கு வழங்கி உள்ளார். அதனால் சிறப்பாக செயலாற்ற வேண்டியது என் கடமை. தற்போதைய காலக்கட்டத்தில், அரசியல் வேகமாக மாறி வருகிறது; இளைஞர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
தமிழகத்தில் நிதிச்சுமை அதிகமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கும் நிதியில் பெரும் பங்கு, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே செலவாகிறது. குறைந்த நிதி மட்டுமே வளர்ச்சி பணிகளுக்காக செலவாகிறது.
இதனால், அரசு துறைகளால் லாபம் ஈட்டுவதற்கு சிரமமாக உள்ளது. இதனை புரிந்து கொள்ளாமல், அரசு ஊழியர்களின் 'ஜாக்டோ -- ஜியோ' அமைப்பினர், 'நிலுவைத் தொகையை விடுவிக்க மனமில்லை' என, தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
'ஊக்கத்தொகை வேண்டும்; ஊதிய உயர்வு வேண்டும்' என வலியுறுத்தி வருவதோடு, 'முதல்வர் நல்லவர், அவருக்கு செய்ய மனம் உள்ளது; ஆனால், நிதியமைச்சர் தியாகராஜன்தான் நிதி வழங்க மறுக்கிறார்' என, என் மீது தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர்.
அரசியலில் தலைவர்களுக்கு மனிதநேயம், செயல் திறன் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் மட்டுமே, மக்களை சந்திக்க முடியும். இவற்றில் ஒன்று இல்லையென்றாலும், அவர்கள் தகுதியை இழந்து விடுவர்.
நம்பிக்கை
மேலும், அரசியலில் வெற்றி பெற வேண்டும் என நினைப்போர், செய்தித்தாள்கள் மற்றும் 'டிவி'களில் வரும் செய்திகளுக்கு, தன் எதிர்வினையை தெரிவிக்காமல், அமைதியாக இருந்தால் வெற்றி பெற முடியும்.
ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு தனித் திறமை உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வாக்காளர்களுடன் நெருங்கிய உறவை, அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எந்த நேரமும் அவரை அழைக்கலாம்; அவரிடம் உதவி கோரலாம் என்ற நம்பிக்கையை, அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வீடு வீடாக சென்று பிரசுரம் வழங்கினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.