சென்னை:''இடைத் தேர்தலில், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது; இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது. பன்னீர்செல்வம் ஒரு மண் குதிரை; அதை நம்பி ஆற்றில் இறங்கினால் கரை சேராது.
தேர்தல் பணிமனை பேனரில், முற்போக்கு என்ற வார்த்தை தவறாக இடம் பெற்றுள்ளது. பின், சரி செய்யப்பட்டு விட்டது. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி தொடர்கிறது. அனைத்தும் இறுதியாகும்போது, கூட்டணியில் உள்ளவர்கள் படம் இடம்பெறும்.
கடலில் பேனா சின்னம் அமைப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
பேனா சின்னம் வைத்தாலாவது, கருணாநிதி நினைவிடத்துக்கு, அதிகம் பேர் வருவர் என, ஸ்டாலின் நினைக்கிறார்.
பேனா நினைவு சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், தி.மு.க., பொதுக்கூட்டம் போல நடத்தப்பட்டது; யாரையும் பேச அனுமதிக்கவில்லை.
எந்த வகையிலும் அரசு பணத்தை விரயமாக்கக் கூடாது. அறிவாலயம் உள்ள இடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்குரியது.
அந்த இடத்தில் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும், பேனா சிலை அமைத்துக் கொள்ளலாம். தி.மு.க., நிதியில் செலவு செய்தால், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
இடைத் தேர்தலுக்கு பா.ஜ.,விடம் ஆதரவு கேட்டுள்ளோம். உரிய நேரத்தில் அவர்கள் முடிவு எடுப்பர். இடைத் தேர்தலில் நாங்கள் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.
இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.