சென்னை:'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை போலியாக உள்ளனர்' என, அ.தி.மு.க., சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பழனிசாமி ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து, புகார் மனு அளித்தார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், 238 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தனர்.
அப்போது, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் உள்ளன.
ஆனால், அப்படி யாரும் அங்கு வசிக்கவில்லை. அவர்களுக்கு போலி அடையாள அட்டை தயார் செய்து, அந்த ஓட்டுகளை பதிவு செய்ய, தி.மு.க., ஆட்களை தயார் செய்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
பணப் பட்டுவாடா நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகின்றன. இதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.