சென்னை:தமிழகத்தில், அடையாறு, கூவம், மணிமுத்தாறு, வசிஸ்டா நதி உட்பட, 10 நதிகளில், மாசு அளவு கடுமையாக அதிகரித்துள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுதும் நதிகளில் துாய்மை நிலை, மாசு அளவு குறித்து, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. இந்த வகையில், 2022ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுதும், 603 நதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 30 மாநிலங்களில், 279 ஆறுகளில், 311 இடங்களில் மாசு அளவு மிக அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
நீரில் பி.ஓ.டி., எனப்படும், உயிர் வேதியியல் ஆக்சிஜன் தேவை எவ்வளவு உள்ளது என்ற அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
துாய்மையான நீரில் இயற்கையாகவே உயிரினங்கள் வாழ ஏற்ற அளவில், உயிர் வேதியியல் ஆக்சிஜன் இருக்கும்.
இயல்பு நிலையில் இதன் தேவை, 1 லிட்டருக்கு, 3 மில்லி கிராமாக இருக்கும்.
இதில், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதன் அடிப்படையில், நீரின் தரம் மதிப்பிடப்படுகிறது. 1 லிட்டர் நீரில், பி.ஓ.டி., தேவை, 30 மி.கிராமுக்கு மேல் உள்ள இடங்கள், முதல் நிலையாகவும்; பி.ஓ.டி., தேவை குறையும் அளவுக்கு ஏற்ப, நதிகள் ஐந்து நிலைகளாக வகைபடுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், காவிரி, பவானி, அமராவதி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஸ்டா நதி, அடையாறு, கூவம் ஆகிய, 10 நதிகள் அதிகபட்சமாக மாசடைந்து உள்ளது தெரிய வந்துள்ளது.
இதில், அடையாறு, கூவம், மணிமுத்தாறு, வசிஸ்டா நதி ஆகியவற்றில், பி.ஓ.டி., தேவை மிக அதிகமாக இருப்பதால், இவை உயிரினங்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அமராவதி, பவானி, பாலாறு ஆகியவற்றில், பி.ஓ.டி., தேவை சரி செய்யக்கூடிய முதல் நிலை பாதிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நதிகளில் மாசு ஏற்படுவதை கண்காணித்து, தடுப்பதற்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.