சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஆபரண தங்கம் சவரன் விலை 44 ஆயிரம் ரூபாயை தாண்டி, 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச நிலவரங்களை பொறுத்து, உள்நாட்டில் தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அமெரிக்கா, சீனா இடையில் நிலவிய வர்த்தக போர், கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2020ல் தங்கம் விலை மிகவும் அதிகரித்தது.
அந்தாண்டின் ஆக., 7ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம் 5,420 ரூபாய்க்கும்; சவரன் 43 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகின.
இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்தாலும் புதிய உச்சத்தை எட்டவில்லை.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் 1 கிராம் 5,415 ரூபாய்க்கும்; சவரன் 43 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகின.
எப்போதும் இல்லாத வகையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 5,505 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து, 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதையடுத்து, முதன் முறையாக சவரன் விலை 44 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
வெள்ளி கிராமுக்கு 1.80 ரூபாய் உயர்ந்து, 77.90 ரூபாய்க்கு விற்பனையானது.