மதுரை:''அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்பது தொண்டர்கள், பா.ஜ.,வின் விருப்பமாக உள்ளது,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி நடந்த தேர்தலில், ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்; 2026 வரை அப்பதவி இருக்கிறது.
'இரட்டை இலை' சின்னத்தை என்னிடம் கேட்டு வந்தால் கையொப்பம் இடுவேன்; சசிகலாவையும் உறுதியாக சந்திப்பேன்.
அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்பது தொண்டர்கள், பா.ஜ.,வின் விருப்பமாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்; எங்கள் அறிவிப்பு முறையானது.
ஈரோடு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக அரசு கடலில் பேனா நினைவு சின்னம் நிறுவும் இடம் குறித்து, சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறேன்.
அங்கு வாழும் மீன்களின் வளம் குறித்தும் கேட்டிருக்கிறேன். மீனவர்கள், மீனவ சங்கங்களின் கருத்துகளையும் நேரடியாக கேட்டு அறிய உள்ளேன். அதன் பின், அத்திட்டம் குறித்து உறுதியாக தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.