'தொழிலதிபர் அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டின் கூட்டுக்குழுவை அமைத்து விசாரணையை உடனடியாக துவக்க வேண்டும்; இதன் விபரங்களை நாட்டு மக்களுக்கு தினமும் தெரியப்படுத்த வேண்டும்' என எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பி ரகளை செய்ததால், பார்லி.,யின் இரு சபைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.
பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது.
இந்நிலையில், 31ம் தேதி துவங்கிய பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல் என இரு அலுவல்கள் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின், நேற்று வழக்கமான அலுவல்களை மேற்கொள்வதற்காக, லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் கூடின.
லோக்சபாவில், கேள்வி நேரத்தை துவக்க சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார்.
கடும் அமளி
ஆனால், 'அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதானி நிறுவன மோசடி குறித்து விவாதிக்க வேண்டும்' என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோரினர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்டிருந்த 'நோட்டீஸ்'கள் அனைத்தும் ஏற்கப்படவில்லை என்பதை அறிந்ததும், காங்., தலைமையில் தி.மு.க., திரிணமுல், இடதுசாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் என 13 எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள், கடும் அமளியில் இறங்கினர்.
'அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக, முழுவிசாரணையை உடனடியாக துவக்க வேண்டும். இதன் விபரங்களை தினந்தோறும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என குரல் எழுப்பினர்.
இதனால், அலுவல்கள் துவங்கிய சில நிமிடங்களிலேயே, 2:00 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் கடும் ரகளை செய்யவே, சபை ஒத்திவைக்கப்பட்டது. பின், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்திற்குப் பின், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
எல்.ஐ.சி., மற்றும் பொதுத்துறை வங்கிகளின் முதலீடுகள், கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இது குறித்து விவாதிக்க, விதி எண் 267ன் கீழ் 'நோட்டீஸ்' வழங்கியிருந்தோம். ஆனால் ஏற்கப்படவில்லை.
சிறப்பு விசாரணை
லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் அனைத்து அலுவல்களையும் ரத்து செய்துவிட்டு, இது பற்றி விவாதித்தே ஆக வேண்டும்.
இந்த மோசடி விவகாரம் குறித்து, ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அல்லது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் மதிய உணவு இடைவேளைக்குப் பின், இரு சபைகளும் கூடின.
அப்போதும், எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தியதால், அலுவல்களை நடத்த முடியாமல் போகவே, இரு சபைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை, கன்னியாகுமரி தொகுதி காங்., - எம்.பி., விஜய் வசந்த் நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார். இதில், 'காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான நான்கு வழிச்சாலை முடங்கி கிடக்கிறது. மண் எடுப்பதற்கான டெண்டர் பணிகளில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து, இந்த சாலை திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, ஆரணி தொகுதி காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத் நேரில் சந்தித்து அளித்த மனுவில், 'பாமினி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ஹவுரா எக்ஸ்பிரஸ், தாதர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், திண்டிவனம் - -நகரி, திண்டிவனம் - -திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -