சென்னை:'தமிழர்களின் கலாசார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே, தி.மு.க.,வின் நோக்கமாக இருக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடக்கும்.
இந்தாண்டு பொங்கல் தினம் துவங்கி, பல வாரங்களாக அனுமதி கேட்டும், அதை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது, திறனற்ற தி.மு.க., அரசு.
அனுமதி கொடுப்பதும், மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடி கொண்டிருப்பதால், ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், தற்போது மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல, தமிழர்களின் கலாசார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே, தி.மு.க.,வின் நோக்கமாக இருக்கிறது.
இவர்கள் ஆட்சிக்கு வரும் முன், எருது விழா தடை செய்யப்படாது என்று கூறி விட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர். போராட்டம் நடத்தி தான் காலம் காலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்கு, பொது மக்களை தள்ள வேண்டாம்.
எருது விடும் விழாவிற்கு அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனே அனுமதி வழங்க வேண்டும் என, தி.மு.க., அரசை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.