சென்னை:''உலக நாடுகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா இருக்கிறது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
புதுடில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, தமிழக தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை கவர்னர் மாளிகையில், நேற்று நடந்தது.
இதில், கவர்னர் ரவி பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
பின், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நான்கு லட்சம் பேர், தேசிய மாணவர் படையில் உள்ளனர். இது, தனி நபர் வளர்ச்சியை கடந்து, கூட்டு மனப்பான்மையை வலுப்படுத்தும்.
வரும் 2047ம் ஆண்டில் வல்லரசாக மாற வேண்டும் என்ற சவாலை நோக்கி நாடு செல்கிறது.
இந்த சூழலில், இந்தியாவின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என, உணர்ந்து செயல்பட வேண்டும். எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் நீங்கள் சிறந்த விளங்க வேண்டும்.
ஒட்டுமொத்த உலக நாடுகளும், தற்போது இந்தியாவை உற்று நோக்கி வருகின்றன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது புதுப்புது பிரச்னைகள், சவால்கள் வருகின்றன. உலக நாடுகளில் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்க, இந்தியாவின் பார்வையை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.
இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக, தற்போது யாரும் பார்க்கவில்லை; வளர்ந்த நாடாகவே பார்க்கின்றனர்.
உலக நாடுகளில் நடந்து வரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. உலக நாடுகளிடம் இருந்து பெறாமல், உலக நாடுகளுக்கு கொடுக்கக்கூடிய இடத்திற்கு இந்தியா நகர்ந்துள்ளது.
கொரோனா பேரிடர் போன்ற காலத்தில், ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
எனவே, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில், இளைஞர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்களாகிய நீங்கள், எப்போது வேண்டுமானாலும், கவர்னர் அலுவலகத்தை, இ - மெயில் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகம், புதுச்சேரி என்.சி.சி., இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் அதுல்குமார் ரஸ்தோகி, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், கல்லுாரிக் கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பங்கேற்றனர்.