திருப்பூர்:திருப்பூர் நகரப் பகுதியில் கண்காணிப்பில் ஏற்பட்ட தொய்வு காரணமாக மீண்டும் பாலிதீன் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அதிகாரிகள் நடவடிக்கையும், பொதுமக்கள் ஒத்துழைப்பும் மட்டுமே பாலிதீன் ஒழிப்புக்கான தீர்வாக அமையும்.திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதன் மக்கள் தொகை 12 லட்சத்துக்கும் மேல் உள்ளது.
இங்குள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மார்க்கெட் வளாகங்கள் என தினமும் சராசரியாக 750 மெட்ரிக் டன் அளவிலான குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இதில் பெருமளவு பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாக உள்ளன.
நகரப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுகாதார பிரிவினர் கடைகள் மற்றும் ஓட்டல்களில் ஆய்வு நடத்தி அவ்வப்போது பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு மாதமாக கண்காணிப்பு பணியில் பல்வேறு காரணங்களால் சிறு தொய்வு ஏற்பட்டது. இதனால், மீண்டும் பாலிதீன் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.டீக்கடை மற்றும் ஓட்டல்களில் பார்சல் வழங்குவது, மளிகை கடைகள், காய்கறி கடை, பழக்கடை, பூக்கடைகளில் பெருமளவு பாலிதீன் கவர்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
பயன்படுத்திய பாலிதீன் பொருட்கள் குப்பை தொட்டிகள், ரோடுகள், கழிவு நீர் கால்வாய், நீர் வழிப்பாதைகளில் இவை வீசியெறியப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் கூறியதாவது:மாநகராட்சி அளவில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இளம் பொறியாளர், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், உணவு பொருள் பாதுகாப்புதுறை, தன்னார்வலர்கள் அடங்கிய சிறப்பு குழு மூலம் பாலிதீன் பொருட்கள் பயன்பாடு குறித்து மாதம் தோறும் ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், மண்டலவாரியாக உதவி கமிஷனர்கள் தலைமையில், சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு வாரம் தோறும் கட்டாயமாகவும், திடீர் சோதனைகளும் நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நகருக்குள் பாலிதீன் கவர்கள் கொண்டு வரும் பார்சல் வாகனங்கள் கண்காணித்து பெருமளவு தடை செய்யப்பட்டுள்ளது.
கடைகளில் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு வைத்திருந்த வகையில் ஏறத்தாழ 10 டன் எடையுள்ள பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கவுரி சரவணன் கூறினார்.
மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு காரணமாக பாலிதீன் பொருட்களின் பயன்பாடு மாநகராட்சி பகுதியில் பெருமளவு குறைந்துள்ளது.
குப்பைகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுவது பெரும் சிரமத்தையும் பொருள் செலவையும் ஏற்படுத்துகிறது. சேகரமாகும் கழிவுகள் தரம் பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. பெரும்பாலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கப்படாதது ஒரு முக்கிய காரணம்.
தன்னார்வலர்களுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பாலிதீன் பொருட்களை பயன்பாட்டை தவிர்த்தும், குப்பைகளை தரம் பிரித்தும் வழங்கி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இதனால் பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.