சென்னை:'மர்ம நபர்கள் என் பெயரில், சமூக வலை தளத்தில் போலி கணக்கு துவங்கி, பண மோசடி செய்ய முயற்சித்து வருகின்றனர்' என, தி.மு.க., - எம்.பி., போலீசில் புகார் அளித்துள்ளார்.
தி.மு.க.,வைச் சேர்ந்தவர், வட சென்னை லோக்சபா தொகுதி எம்.பி., கலாநிதி வீராசாமி, 53. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:
என் பெயரில், மர்ம நபர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' ஆகிய சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவக்கி உள்ளனர். இதில், என் படத்தையும் பயன்படுத்தி உள்ளனர்.
என் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு, 'வங்கி சர்வர் பிரச்னை உள்ளது. இதனால், வங்கி கணக்கில் இருந்து, பணம் எடுக்க முடியவில்லை. எனக்கு அவசரமாக பணம் தேவை' என, நான் அனுப்பியது போல, குறுஞ்செய்தி அனுப்பி, மோசடிக்கு முயற்சித்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
புகார் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.