ஓசூர்: சூளகிரி அருகே, எருது விடும் விழாவிற்கு அனுமதி கேட்டு துவங்கிய சாலை மறியல் போராட்டம், கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியும், கட்டையால் அடித்தும், 30க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்; 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழா நடத்தப்படும். குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளியில் நடந்த எருது விடும் விழாவில், சரியான பாதுகாப்பு வசதிகளை செய்யாததால், சிறுவன் உட்பட மூன்று பேர் இறந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் எருது விடும் விழா விதிமுறைகளை கடுமையாக்கியது.
இந்நிலையில், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில், நேற்று காலை எருது விடும் விழா நடக்க ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு அனுமதி வழங்கப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. ஏற்கனவே, இருமுறை நிறுத்தப்பட்ட எருது விடும் விழா, மீண்டும் நடப்பதாக அறிவிக்கப்பட்டதால், ஓசூர் சுற்று வட்டார பகுதியினர் நேற்று அதிகாலை, 5:00 மணி முதலே, விழா திடலுக்கு வர துவங்கினர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். அங்கு, 300க்கும் மேற்பட்ட காளைகளையும் அழைத்து வந்தனர்.
அதிகாரிகள் தடை
ஆனால், ஓசூர் சப் - கலெக்டர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இன்னும் விழா திடலை தணிக்கை செய்யவில்லை என்றும், மாற்றுத் தேதியில் விழாவை நடத்துமாறும் கூறி, திடீரென தடை விதித்தனர். மூன்றாவது முறையாக, விழா தடை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, லாரியை நிறுத்தி, ஜல்லி கற்களை சாலையில் கொட்டி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை, 9:00 மணிக்கு சூளகிரி தாசில்தார் அனிதா பேச்சு நடத்த வந்தார். அவரை, ஜீப்பிலிருந்து இறங்க விடாமல் முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தாசில்தார் ஜீப் முன் படுத்து கோஷம் எழுப்பினர்.இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, 10 கி.மீ.,க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாணவ - மாணவியர் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் பேச்சு நடத்தினார்; விழா நடத்த அனுமதி வழங்கினார்.
ஆனால், 'மாவட்டம் முழுதும் அனுமதி வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும்' எனக்கூறி, போராட்டக்காரர்கள் மறியலை தொடர்ந்தனர். காலை, 6:30 மணிக்கு துவங்கிய போராட்டம், 10:00 மணிக்கு கலவரமாக மாறியது. திடீரென சாலையில் நின்ற, 15க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், போலீஸ் ஜீப்கள், கார்கள் என மொத்தம், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது, கற்களை வீசினர்; கட்டைகளால் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால், எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி, அதிவிரைவுப்படையினர் மற்றும் போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் போலீஸ்காரர்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். அதனால், வேறு வழியின்றி 'வஜ்ரா' வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
பகல், 11:30 மணிக்கு மேல் போராட்டக்காரர்கள் கலைய துவங்கியதால், போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து சீராக, இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது. போராட்டக்காரர்கள் கற்கள் வீசி தாக்கியதில், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பாலகிருஷ்ணன், ராணி, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஆயுதப்படை எஸ்.ஐ., பெண் ஏட்டு என, பலருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
மொத்தம், 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களை, போலீசார் வீடியோ பதிவு செய்தனர். போராட்டம் முடிந்த பின், வீடியோவில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். முன்னதாக, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில், வாகனங்கள் திரும்பி விடப்பட்டன; வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் ஸ்தம்பித்தனர்.