ஈரோடு:அ.தி.மு.க.,வில், பழனிசாமி அணி தேர்தல் பணிமனையில், நான்காவது முறையாக, 'பிளக்ஸ் பேனரை' மாற்றி வைத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி, அ.தி.மு.க., பழனிசாமி அணி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, பணிமனை திறப்பு விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை, 'அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம்' என்ற பிளக்ஸ் வைத்திருந்தனர்.
சில மணி நேரத்தில் அதை மாற்றி, 'அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம்' என்ற பிளக்ஸ் வைத்து, பிரதமர் மோடியின் படத்தை அகற்றினர்.
ஆனால், த.மா.கா., தலைவர் வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி படங்கள் மட்டும் இடம் பெற்றன. இது, அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணா மலை, 'அக்கூட்டணி பிளக்ஸ் குறித்து எங்களுக்கு தெரியாது. அப்படி ஒரு கூட்டணி இருந்தால் உரிய நேரத்தில் பதிலளிப்போம்' என்றார்.
இந்நிலையில், மாலை, 4:30 மணிக்கு பிளக்ஸ் பேனரில், 'தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என இருந்த இடத்தை கருப்பு, 'ஸ்டிக்கர்' வைத்து ஒட்டி, 'தேசிய ஜனநாயக கூட்டணி' என, மாற்றினர்.
அத்துடன் பிளக்ஸ் பிரச்னை முடிவுக்கு வந்தது என அ.தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்கள் மற்றும் பா.ஜ.,வினர் நம்பிய நிலையில், இரவில், பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது. அதற்கு பதில் வேறு பேனர் வைத்துள்ளனர்.
அதில், வாசன், கிருஷ்ணசாமி படம் உள்ள நிலையில், பா.ஜ., தலைவர்கள் படம் இடம் பெறாததால், இக்கூட்டணியில் பா.ஜ., இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பணிமனையில், 24 மணி நேரத்துக்குள், நான்கு பிளக்ஸ் பேனர்கள், கூட்டணிக்கு பல பெயர்களை வைத்து மாற்றியது புதிராகவே உள்ளது.