சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே மணிநகரில் எலக்ட்ரிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. 7 மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது.
சிவகாசி சித்துராஜபுரம் சசி நகரை சேர்ந்தவர் ரவி அருணாச்சலம் 65. இவருக்கு மணி நகரில் எலக்ட்ரிக் கடை உள்ளது.
அண்டர் கிரவுண்ட், 3 தளம் கொண்ட இந்த கடையில் எலக்ட்ரிக் பொருட்கள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கடையை பூட்டிச் சென்றனர். இரவு 12:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பிடித்த தீ மூன்று தளங்களுக்கும் பரவியது. 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எரிந்ததால், மாநகராட்சி வாகனங்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. காலை 8:00 மணிக்கு தீ அணைக்கும் பணி முழுமையாக முடிந்தது.
கடைக்குள் அதிக அளவில் பிளாஸ்டிக் குழாய்கள், ஒயர்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால், தீ விபத்தில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து நடந்த கடையின் அருகில் இடைவெளியுடன் மற்ற கட்டடங்கள் இருந்ததால் தீ பரவவில்லை.
மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிவகாசி போலீசார் விசாரிக்கின்றனர்.