திருப்பூர்:மத்திய பட்ஜெட்டில் தோட்டக்கலை துறைக்கு, 2,200 கோடி ரூபாய், 'ஸ்டார்ட் அப்' துவங்க, சிறப்பு வேளாண் நிதி உள்ளிட்ட விவசாயத் தொழில் சார்ந்த அறிவிப்புகள், விவசாய சங்கத்தினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இறக்குமதி கூடாது
பெரியசாமி, தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், ஈரோடு:
உரங்களுக்கான மானியம் குறைப்பு என்பது, உரங்களின் விலையேற்றத்துக்கு காரணமாக அமையும். ஏற்கனவே, பொட்டாஷ், யூரியா போன்றவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில், உரங்களின் தொடர் விலையேற்றத்தால், விவசாயிகள் தாமாகவே, இயற்கை விவசாயத்தை நோக்கி நகர துவங்கும் மனநிலை ஏற்படும்.
விவசாயிகள் நிலங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இருந்தால் மட்டுமே சாணம் உள்ளிட்ட இயற்கை உரம் பெற முடியும்; அதற்கான திட்டமிடலும் அவசியம். டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்களுக்கான மானியம் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
பாமாயில், ஜவ்வரிசி, மரவள்ளி, சர்க்கரை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதை தவிர்த்து, உள்நாட்டு விளைச்சலை ஊக்குவிக்க வேண்டும். 'வேளாண் ஸ்டார்ட் அப்'கள் வரவேற்கதக்கது.
மானியம் தேவையில்லை
நல்லசாமி, செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு:
உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், மத்திய பட்ஜெட் அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்க, 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; கடன் வழங்க இவ்வளவு தொகை ஒதுக்க தேவையில்லை; அதற்கு மாறாக, திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கலாம்.
இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை அழைத்துச் செல்லும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர்களை ஊக்குவிக்கும் 'ஸ்டார்ட் அப்' அறிவிப்பு மூலம், வரும் காலங்களில் இயற்கை விவசாயம் மேம்படும். உரங்களுக்கான மானியம் குறைப்பு என்பது, வரவேற்கத்தக்கது. மானியம், இலவசம் போன்றவற்றால் லஞ்சம், ஊழல் பெருகும்; அவை தேவையில்லை.
சம்பள கமிஷன் போன்று, விவசாய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினால், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்.
விலை நிர்ணயம்
சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர், களஞ்சியம் விவசாயிகள் சங்கம்:
அதிகாரிகளை உள்ளடக்கி, கமிஷன் அமைத்து, அதன் மூலம் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதை காட்டிலும், 'பட்டறிவு' அடிப்படையில், உற்பத்தி செலவு உள்ளிட்ட நடைமுறை செலவினங்களை கணக்கிட்டு, விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
20 லட்சம் கோடி ரூபாய் விவசாயக்கடன் என்பது, தகுதியான விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும்; போலி பயனாளிகள் தவிர்க்கப்பட வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், உணவு தேவை என்பதும், அதுசார்ந்த வேளாண்மை தொழில் என்பதும், காலத்தால் அழிக்க முடியாதது; அந்த வகையில், இளைஞர்களை வேளாண்மை தொழில் பக்கம் வரவழைக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப்' துவங்க நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கது.
கடனாளி ஆவார்களே!
செல்லமுத்து, மாநில தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி:
பல்வேறு தொழில் துறைகளுக்கும், பல லட்சக்கணக்கான ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவத்துக்கு இணையாக உழைத்து, உணவு கொடுக்கின்ற விவசாய தொழிலை காப்பாற்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.
தோட்டக்கலை துறை வளர்ச்சிக்காக, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது மட்டும் ஆறுதல் அளிக்கிறது. விவசாயத் துறைக்கு கடன் வழங்க, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், மீண்டும் விவசாயிகள் இதனால் கடனாளி ஆக்கப்படுவார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கான திட்டங்கள் இல்லை.
தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடன் வட்டிக்கு தள்ளுபடி செய்து, விளை பொருட்களுக்கு கட்டுப்படியாக கூடிய விலை நிர்ணயிக்க வேண்டும்.
மேலும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்து, வினியோகிக்கக்கூடிய நடைமுறையை கொண்டு வந்திருந்தால், அது வரவேற்கக் கூடியதாக இருக்கும். விவசாயிகளுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.
உயராத உதவித்தொகை
ஈஸ்வரன் (மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்) :
விவசாயத் துறைக்கு, 20 ஆயிரம் ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாதது ஏமாற்றம். அதிக உற்பத்தி இருக்கும்போது விளைபொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும்.
விளை பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான தானிய கிடங்குகள் அறிவிப்பு வெளியாகவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.