ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக தை பிரதோஷ வழிபாட்டிற்கு இன்றும், நாளையும் (பிப். 3,4 தேதிகளில் ) பக்தர்களுக்கு அனுமதி இல்லை, பிப். 5 பவுர்ணமி அன்றும் மழை பெய்தால் அனுமதி கிடையாது என வனத்துறை தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று (பிப். 3) தை பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று காலை முதல் கோயில் வனப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
ஓடைகளில் நீர்வரத்து உள்ளது. மழை தொடர்ந்தால் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் (பிப். 3 ,4) பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது. பிப்.5 காலையில், மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மழை பெய்யாவிட்டால் பவுர்ணமி வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள். அது அன்றைய சூழ்நிலையை பொறுத்தது என சாப்டூர் வனச்சரகர் செல்வமணி தெரிவித்தார்.