திருப்பூர்:'டாக்டர் ஒப்புதல் இல்லாமல் மருந்து வழங்க கூடாது. அவ்வாறு வழங்கி நோயாளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், மருந்தக உரிமையாளர்களே பொறுப்பாவீர்கள்; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என, மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் எச்சரித்தார்.
திருப்பூர் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை, மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட மருந்து வணிகர் சார்பில், மருந்து விற்பனை செய்யும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விளக்க, விழிப்புணர்வு கூட்டம், பிருந்தாவன் ஓட்டலில் நேற்று நடந்தது.
மருந்து வணிகர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை இணை இயக்குனர், கனகராணி தலைமை வகித்தார். மருத்துவ பணிகள் துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் புனிதா, அரசு மருத்துவ கல்லுாரி துணை பேராசிரியர் ஜனனி முன்னிலை வகித்தனர்.
மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் (கோவை மண்டலம்) குருபாரதி பேசியதாவது:
மருந்தகங்கள் நடத்துவோர் மருந்து விற்பனையில் கவனமுடன் இருக்க வேண்டும். மாநிலம் முழுதும் மருந்தகங்களில் கருத்தடை மாத்திரை, போதை தரக்கூடிய மருந்து விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் எந்த மருந்துகளையும் விற்க கூடாது.
டாக்டர் ஒப்புதல் இல்லாமல் மருந்து வழங்கப்பட்டு, நோயாளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், நீங்கள் பொறுப்பாவீர்கள். தொடர்ந்து, மருந்தகத்தை நடத்த முடியாத வகையில், 'லைசன்ஸ்' ரத்து செய்யப்படும். டாக்டர் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் போதை தரக்கூடிய, கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வோர் குறித்து நீங்களே புகார் அளிக்கலாம்.
ஒருவர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மருந்தகம் நடத்துவோருக்கு, துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, சட்ட விதிகளுக்கு உட்பட்டு மருந்து விற்பனை செய்ய வேண்டும். தவறு என தெரிந்தே நம் குடும்பத்தாரும், உறவினர்களுக்கும் நாம் ஒரு மருந்தை பரிந்துரைப்போமா? எனவே, இதுவரை மாறாதவர்கள், இனியாவது மாறி கொள்ளுங்கள். இல்லாவிடில், நடவடிக்கை நிச்சயம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், மருந்து வினியோகம், மருந்து இருப்பு பராமரித்தல், வலி நிவாரண மாத்திரை, கருத்தடை மாத்திரை குறித்து மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மகாலட்சுமி, உமா மகேஷ்வரி, ராமசாமி ஆகியோர் மருந்தக உரிமையாளர்களுக்கு விளக்கினர். மாவட்டம் முழுதும் இருந்து, 400 மருந்துக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.