கோவை;எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா (ஜூவல் ஒன்) நிறுவனம், சி.எஸ்.ஆர்., திட்டத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறது.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி, புதுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் 70 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா (ஜீவல் ஒன்) நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (சி.எஸ்.ஆர்.,) கீழ், ரூ.10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் தொட்டி சீரமைத்தல், வகுப்பறைகள் சீரமைத்தல், கழிவறை மேம்படுத்துதல் மற்றும் புனரமைப்பு செய்தல், பள்ளி முழுவதும் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் துவக்க விழாவில், எமரால்டு கம்பெனியின் இயக்குனர் வெங்கடகோபால், பொது மேலாளர் கார்த்திக், பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன், நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., மேலாளர் தினேஷ், முதுநிலை மேலாளர் சரவணன், செயல் அலுவலர் வீரபாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியை அருள்தாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.