வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :'உயர் நீதிமன்றங்களில் காலியாகும் நீதிபதிகள் பதவியிடங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கால நிர்ணயத்தை, பல்வேறு உயர் நீதிமன்றங்கள் மீறியுள்ளன' என, ராஜ்யசபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான, 'கொலீஜியம்' முடிவு செய்யும். இந்த நியமன முறை தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆறு மாதம்
இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று நீதித் துறை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்து கூறியுள்ளதாவது: தற்போதுள்ள நடைமுறைகளின்படி, உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பதவியிடங்கள் காலியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, அது தொடர்பான பரிந்துரையை அனுப்ப வேண்டும்.
இதை, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற கொலீஜியம், மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த பரிந்துரை குறித்து உளவு அமைப்பின் கருத்துக்களுடன் தலைமை நீதிபதி உட்பட ஐந்து பேர் உறுப்பினர்களாக உள்ள உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், ஆறு மாதங்கள் என்ற கால நிர்ணயத்தை பெரும்பாலான உயர் நீதின்றங்கள் மீறி வருகின்றன.

பரிசீலனை
இந்தாண்டு ஜன., 30ம் தேதி நிலவரப்படி, ஏற்கனவே காலியாக உள்ள 191 நீதிபதி பதவியிடங்கள் மற்றும் அடுத்த ஆறு மாதங்களில் காலியாக உள்ள 45 இடங்கள் என, 236 இடங்களுக்கான பரிந்துரைகள் உயர் நீதிமன்ற கொலீஜியத்திடம் இருந்து வரவில்லை.
ஜன., 30ம் தேதி நிலவரப்படி, 18 பரிந்துரைகள் தொடர்பாக மறுபரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆறு பேரின் பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஏழு பரிசீலனைகளில் உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் கருத்துகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் கோரியுள்ளது.
உயர் நீதிமன்ற கொலீஜியங்கள் அனுப்பியுள்ள, 142 பரிந்துரைகள் பல்வேறு கட்ட பரிசீலனையில் உள்ளன. இதில், நான்கு பரிந்துரைகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ளன. மீதமுள்ள, 138 பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.
உச்ச நீதிமன்றத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 34 நீதிபதி பதவியிடங்களில், தலைமை நீதிபதி உட்பட, 27 பேர் தற்போது பணியில் உள்ளனர். காலியாக உள்ள ஏழு இடங்களுக்கான பரிந்துரையை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் அனுப்பியுள்ள பரிந்துரையை மறுஆய்வு செய்யும்படி மத்திய அரசால் கேட்க முடியும்.ஜன., 30ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 1,108 நீதிபதி பதவியிடங்களில், 333 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.