சென்னை: ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
வடபழநி ஆண்டவர் கோவிலில், நாளை(பிப்.,4), தைப்பூசம் நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வரும் பாலால், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின், செண்பகப்பூ அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்.
இரவு 8:30 மணிக்கு, பழநி ஆண்டவர் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.