வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'சென்னை மெரினா கடலில், கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் முறையாக நடந்ததா' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை, கடல் ஆமைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும் பகுதி; சுனாமிக்கு வாய்ப்புள்ள பகுதி. எனவே அங்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என, திருச்செந்துாரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில், 2022 டிசம்பரில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை செயலர்கள், தலைமைச் செயலர், மாநகராட்சி ஆணையர், பொதுப்பணி, மீன் வளத் துறை செயலர், சென்னை கலெக்டர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்டோர், எட்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த மனு, பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகநாதன் கூறியதாவது:
மறைந்த கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு, இதுவரை மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை; திட்டத்தின் ஆவணப் பணி மட்டுமே நடந்து வருகிறது.

முதல்கட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட்டு, பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம், டிசம்பர் 31-ல் நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டு, இறுதி செய்த பின், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்கப்படும். எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. இவ்வாறு அவர் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட பசுமை தீர்ப்பாய நீதிபதியும், நிபுணர் குழு உறுப்பினரும், 'ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்தால், நடந்தது கருத்து கேட்பு கூட்டமாகவே தெரியவில்லை.
'கருத்து கேட்பு கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா; பொது மக்கள் எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதா' என்று கேள்விகள் எழுப்பினர்.
மேலும், 'கருத்து கேட்பு கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை' என்றும், மனுதாரர் ராம்குமார் ஆதித்யனிடம் நீதிபதி கேட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய, 14 துறைகள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசின் பொதுப்பணி துறையும், தமிழ் வளர்ச்சி துறையும் மட்டுமே அறிக்கை தாக்கல் செய்திருந்தன.
இதை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம், மற்ற 12 துறைகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, மார்ச் 2-ம் தேதி தள்ளி வைத்தது.