இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட, பிரதமர்அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் முடிந்தும் பணிகள் இன்னும் நடக்கவில்லை. பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கையும், கவர்னர்களை வைத்து இடையூறு செய்யும் பணியையும், பா.ஜ., அரசு செய்கிறது.
'மத்திய பா.ஜ., அரசை திட்டி தினமும் ஒரு பேட்டி, அறிக்கை தந்தே ஆகணும்' என, தி.மு.க., தரப்பு இவருக்கு, 'சிறப்பு அசைன்மென்ட்' ஏதும் கொடுத்திருக்குமோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
இந்திய வரலாற்றில், ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திலும், மதுவிலக்கை கொண்டு வந்தவர், முதல்வராக இருந்த ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் தான். 1948-ல் அவர் மதுவிலக்கை கொண்டு வந்த போது, 'அரசுக்கு ஆண்டுக்கு, 18 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்' என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், 'ஆண்டுக்கு, 81 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதற்காக மதுவிலக்கை கைவிட மாட்டேன்' என்று உறுதிபட கூறினார். அவரது, 128-வது பிறந்த நாளில், அவர் நடைமுறைப்படுத்திய மதுவிலக்கை மீண்டும் ஏற்படுத்த உறுதியேற்போம்.
தற்போது, மது விற்பனையால், அரசுக்கு ஆண்டுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல வருவாய் கிடைக்கிற சூழல்ல, மீண்டும் மதுவிலக்கு எல்லாம் சாத்தியமே இல்லை!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி:
தி.மு.க., அரசு, 'டாஸ்மாக்' தவிர மற்ற துறைகளின் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கான, எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், அனைத்து துறைகளிலும் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு நிதிகளை வழங்குகிறது. அந்த நிதியை சரியான முறையில், தி.மு.க., அரசு பயன்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் நிதியிலான திட்டங்களில், 'திராவிட மாடல்' என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டுவதில் மட்டும்தானே, இவங்க கவனம் செலுத்துறாங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணிபேச்சு:
மத்திய அரசு இரண்டு ஆண்டுகளில், என்.எல்.சி., நிறுவனத்தை தனியாருக்கு விற்க உள்ளதாக பார்லிமென்டில் அறிவித்தது. தற்போது எதற்காக, விரிவாக்கம் என்ற பெயரில், 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பொதுமக்களிடமிருந்து எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடும் தி.மு.க., அரசு, விளை நிலங்களை என்.எல்.சி.,க்கு தாரை வார்க்கிறது. விவசாயிகளுக்கு எதிரான கட்சி, தி.மு.க., என பகிரங்கமாக கூறுகிறேன்.
'விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க.,வுடன், எந்நாளும் கூட்டணி வைக்க மாட்டோம்' என்றும், இவர் பகிரங்கமாக அறிவிப்பாரா?