சென்னை: பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று (பிப்-3 ) பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்தித்திருப்பது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்துபேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அண்ணாமலை பூங்கொத்து கொடுத்தார். தொடர்ந்து அவருக்கு பழனிசாமியும் பொன்னாடை போர்த்தினார். ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் அதிமுக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தொடர்ந்து அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று அவரையும் சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக பிளவுப்பட்டு இருப்பதால் வேட்பாளர் யாரை நிறுத்துவது என்பதில் குழப்பம் முடிந்தது. வேட்பாளரும் பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகன், பழனிசாமி சார்பில் தென்னரசு அறிவிக்கப்பட்டனர்.
இதில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேட்புமனு தாக்கல் தள்ளிப்போடப்பட்டது.
இரட்டைஇலை சின்னம் பெறுவதில் சர்ச்சை
இந்நிலையில் அண்ணாமலை பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும், சந்தித்து பேசியுள்ளது பல யூகங்களை எழுப்பி உள்ளது. இந்த சந்திப்பில் அதிமுக வழக்கில் சிக்கியிருப்பதால் இரட்டைஇலை சின்னம் பெறுவதில் பிரச்சனை இருக்கிறது. இதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி சார்பில் காங்., போட்டியிடுகிறது. இதனை எதிர்த்து பா.ஜ., சார்பில் ஒரு வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.