சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 54வது நினைவு நாள் இன்று (பிப்.,3) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து அண்ணாதுரை நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியில், திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். பேரணியை தொடர்ந்து மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி

இதேபோல அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி பசுமை வழிச்சாலை வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாதுரையின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணாதுரையின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.