வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரண்டாவது நாளாக இன்றும் (2023 பிப்.,3) பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.
பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்து உள்ளது.
'அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதானி நிறுவன மோசடி குறித்து விவாதிக்க வேண்டும்' என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோரினர். இது தொடர்பாக அளிக்கப்பட்டிருந்த 'நோட்டீஸ்'கள் அனைத்தும் ஏற்கப்படவில்லை என்பதை அறிந்ததும், காங்., தலைமையில் தி.மு.க., திரிணமுல், இடதுசாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் என 13 எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள், கடும் அமளியில் இறங்கினர். இதனால், நேற்று பார்லிமென்டின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இரண்டாவது நாளாக லோக்சபாவும், ராஜ்யசபாவும் கூடின. அப்போதும் அதானி விவகாரத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதால், கூட்டத்தொடர் பிப்.,6ம் தேதி காலை 11 மணி வரை ஓத்திவைக்கப்பட்டது.