ஓசூர்: மறியல் போராட்டம் கலவரமாக வெடித்ததற்கு வருவாய்த் துறை, போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததும், உளவு பிரிவு போலீசாரின் செயல்பாடு இல்லாததுமே
காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர், விழாவுக்கு தடை விதித்தனர்.
இந்த தகவல், உள்ளூர் போலீசாருக்கு மட்டுமே தெரியும். உளவுத்துறை போலீசார் முழு தகவலை, மாவட்ட போலீஸ் உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.
முதல்வர் சுற்றுப்பயணம்
தடை விதிக்கப்பட்டதால் பிரச்னை வராது என, போலீசார் இருந்துள்ளனர். தடை விதித்த தகவலை வருவாய்த் துறையினர், போலீஸ் அதிகாரிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை. மூன்றாம் முறையாக விழா தடை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்யப்போகும் தகவல் பரவிய பிறகும், போலீசார், உயர் அதிகாரிகளை உஷார்படுத்தவில்லை.
உயர் அதிகாரிகள் வரட்டும் என, போலீசார் காத்திருந்ததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமானது. பின், மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் வந்து பேச்சு நடத்தியும் பலன் இல்லை; நிலைமை போலீசாரின் கையை மீறிப்போனது.பின் தான், போலீசார் உஷார்படுத்தப்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர்.பேச்சு நடந்த போதே போராட்டக்காரர்கள், தேசிய நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களில் ஏறி கண்ணாடிகளை உடைத்து, பயணியரை அச்சமடைய செய்தனர்; வன்முறையில் ஈடுபட்டு விழாவுக்கு அனுமதி பெற்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், வேலுார் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணத்தில் இருந்தார். பொதுவாக முதல்வர் வருகையின் போது, அருகிலுள்ள மாவட்டங்களில் எந்த பிரச்னையும் இல்லாத அளவுக்கு போலீசார் உஷார்படுத்தப்படுவர்.ஆனால், அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா கலவரமாக மாறும் அளவுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் செயலற்றுப்போய் இருந்துள்ளனர்.
பாதுகாப்பற்ற சூழல்
பெங்களூரு - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சாலையில் தினமும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அப்பகுதியில் நடந்த கலவர சம்பவம், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது. அவசர தேவைக்கு சென்றவர்களும், 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவானது.எருது விடும் விழா தொடர்பாக வருவாய்த்துறையினர், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது; போலீசாரின் மெத்தன செயல்பாடு; வருவாய்த்துறையினர் - போலீசார் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது போன்ற காரணங்களால், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கலவர பூமியாக மாறியது.
இந்த நாளை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மறக்க முடியாத, 'கறுப்பு நாள்' என கூறத் தொடங்கியுள்ளனர்.