வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தி.மு.க., கூட்டணியை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும் என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி ஆகியோர் அதிமுக., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்தித்து பேசினர்.
இதன் பிறகு தமிழக பா.ஜ., அலுவலகத்தில் சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது, சி.டி.ரவி கூறியதாவது: அதிமுக ஆரம்பித்த போது, திமுக.,வை தீயசக்தி என எம்ஜிஆர் விமர்சித்தார். அது 2023லும் மாறவில்லை. தமிழக மக்கள், கலாசாரத்திற்கு எதிராக உள்ளது. ஜெயலலிதாவும் தி.மு.க.,வை தீயசக்தி என விமர்சித்தார். தமிழகத்தில் ஸ்டாலின் அரசு நாளுக்கு நாள் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறது. அரசுக்கு எதிரான மனப்பான்மை அதிகரித்து வருகிறது. மக்களுக்கு எதிராக ஓரு குடும்பத்திற்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது.
மின்சாரம், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக மக்கள் திமுக.,விற்கு எதிராக உள்ளனர். அதிகார பலம், பணபலத்தை வைத்து திமுக இடைத்தேர்தலை திமுக சந்திக்கிறது.
இடைத்தேர்தலில் தீயசக்தி திமுக.,வை தோற்கடிக்க ஒருங்கிணைந்த பாஜ., அதிமுக தேவைப்படுகிறது.

பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருடனான சந்திப்பு நன்றாக இருந்தது. இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்தோம். அதிமுக.,வை இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளை இணைக்க முயற்சித்தோம். இடைத்தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்.
ஆளும் திமுக., கூட்டணியை எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும். பலம் வாய்ந்த வேட்பாளராக இருக்க வேண்டும். தனித்தனி வேட்பாளராக இருக்கக்கூடாது. வேட்புமனு தாக்கலுக்கு கால அவகாசம் உள்ளதால் பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.