கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் இன்று நிருபர்களை சந்தித்த அதிமுக துணை பொது செயலாளர் முனுசாமி கூறியதாவது:
ஓசூர் அருகில் கோபச்சந்தரத்தில் நடந்த எருது விடும் விழாவில் ஏற்பட்ட கலவரத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு முறையான அணுகுமுறையை கையாளவில்லை. பொதுவாக எருது விடும் விழா என்பது பாரம்பரியமாக இங்குள்ள இளைஞர்களால் ஒரு திருவிழா போல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முறைப்படுத்தி அனுமதி கோரியவுடன் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
எருது விடும் விழா உத்தரவு குளறுபடியால் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தமிழக அரசு, செயலற்ற தன்மையில் இருப்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என பழனிசாமி நேற்றே கூறிவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை போல் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தமிழகம் முழுவதும் இது போன்ற விழாக்களுக்கு உரிய அனுமதி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் உணர்வுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்