அதானி குழும நிறுவனங்கள் அனைத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. அக்குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் இன்று இன்ட்ராடே அளவில் 10.40 மணிக்கு 30% சரிந்திருந்தது. ஒரு மாதத்தில் 60% சரிந்திருந்தது. ரூ.1017 என்ற விலையில் இருந்த பங்குகளை, பலரும் வாங்க ஆரம்பித்ததால், அந்த விலையிலிருந்து இன்றைய வர்த்தக நேர முடிவில் 50% அளவுக்கு உயர்ந்து ரூ.1,531 என்ற விலையில் நிறைவடைந்தது.
கெளதம் அதானியின் நிறுவனங்கள் பற்றி ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு மோசமான அறிக்கையை சுமார் 10 நாட்களுக்குப் முன் வெளியிட்டது. இதனால் அதானி குழுமம், தனது வரலாற்றில் மோசமான நெருக்கடியை எதிர்த்துப் போராடி வருகிறது. ஜனவரி 24, 2023 முதல் அதானி குழுமங்கள் சந்தை மதிப்பில் பாதியை இழந்துள்ளன. வியாழன் அன்று கிட்டத்தட்ட 23 சதவீதம் சரிவுடன், அதானி குழுமத்தின் பங்குகள் 52 வார குறைந்த நிலையைத் தொட்டன. இன்றும் அதன் பங்குளின் சரிவு நிலை தொடர்ந்தது. இதனால் உலகப் பணக்காரர்களில் 2வது இடத்தில் இருந்த, கெளதம் அதானி இன்று 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் 50 சதவீதத்திற்கு மேல் சரிந்ததால், அதானிப் பங்குகளை வாங்க தற்போது பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதானி எண்டர்பிரைசஸ் இன்று 30% சரிந்த போதும், அந்த இடத்திலிருந்து 50% அளவிற்கு உயர்ந்து பச்சையில் முடிவடைந்தது. அதானி துறைமுகங்கள் பங்குகளும் 14% இன்ட்ரா டே அளவில் சரிந்து, பின்னர் அந்த நிலையிலிருந்து 25% மீண்டன.
மூலதனத்தை திரட்டுவது பாதிக்கப்படலாம்

நிறுவனங்களை மதிப்பிடும் மூடிஸ் (Moody's), இன்று (பிப். 3) வெளியிட்ட அறிக்கையில் "அதானி குழும நிறுவனங்களின் சந்தைப் பங்கு மதிப்புகள் விரைவான சரிவைக் கண்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, மதிப்பிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி நெகிழ்வுத்தன்மையை மதிப்பிடுவதில் எங்கள் கவனம் உள்ளது. நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகமான அம்சங்களால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மூலதனத்தை திரட்டும் திறன் குறையக்கூடும்." என்று கூறியது.