உடலின் வளர்சிதை மாற்றத்துக்குக் காரணமான முக்கிய ஹார்மோன் தைராக்ஸின். கழுத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி வடிவிலான தைராய்டு சுரப்பி இந்த தைராக்ஸின் ஹார்மோனை சுரக்கிறது. பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டால் அவர்களது கருத்தரிப்பு பாதிக்கப்படுவதுடன் உடல் உபாதைகள் பல ஏற்படும். வளரும் இளம் பெண்களின் மாதவிலக்கு சுழற்சி மாறுபடலாம். 10-13 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தைராய்டு ஹார்மோன் குறைபாடு உண்டானால் விரைவில் பருவமடைய வாய்ப்புள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு தைராக்ஸின் குறைபாடு ஏற்பட்டால் குறைபிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட பெண்கள் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்துப் பார்ப்போமா?
![]()
|
சாப்பாட்டை உணவு நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். உணவை வேகமாக வாயில் திணிக்காமல் மெல்ல மென்று சாப்பிட வேண்டும். இதனால் சாப்பாட்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுவதுமாக உடல் தசைகளால் கிரகிக்கப்படும். இதனால் தைராய்டு சுரப்பி அதிக சத்துகளைப் பெறும்.
யோகா, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவை தைராய்டு ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க உதவும். வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட், முட்டை, கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் தைராக்ஸின் சுரப்பு சீராக இருக்கும். முடிந்தவரை காய்கறி சூப், ஜூஸ் அருந்தாமல் அவற்றை சமைத்து சாப்பிட்டால் நார்சத்து கிடைக்கும். இதனால் தைராய்டு செயல்பாடு மேம்படும்.
அரிசி கஞ்சி, மோர் உள்ளிட்டவற்றில் ப்ரோபயாடிக் அதிகம் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் தைராக்ஸின் சுரப்பு அதிகரிக்கும். ஆரோக்கியமான கொழுப்பு தைராய்டு சுரப்பிக்கு மிக அவசியம். ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த நட்ஸ், முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
நொறுக்குத் தீனி சாப்பிட்டு உடற்பருமனுடன் இருக்கும் இளம்பெண்களை அதிகமாக தைராய்டு பிரச்னைகள் பாதிக்கின்றன. எனவே நொறுக்குத் தீனிகளையும் இனிப்புகளையும் குறைத்துக்கொள்வது நல்லது.