காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் தாயார் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில், கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், குளக்கரையில் நீத்தார் வழிபாடும், மாதாந்திர அமாவாசை, மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.
இக்குளத்தை சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, இக்குளக்கரையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதியில், தெரு மின் விளக்கை இயக்குவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்சாதன பெட்டி திறந்து உள்ளது.
அதில் உள்ள ஒயர்களும் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் துாரத்தில் மின்சாதன பெட்டி திறந்து கிடப்பதால், குறும்புக்கார சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக மின் உபகரணங்களை தொட்டால் மின்சாரம் தாக்கி விபரீதம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, திறந்து கிடக்கும் மின் சாதன பெட்டியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.