வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில் இருந்து, தோண்டாங்குளம் கிராமம் வழியாக, தேவரியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, பல தரப்பு மக்களின் தேவைக்கு ஏற்ப, பலவித வாகனங்களில் சென்று வருகின்றனர்.
தனியார் கல் குவாரிகளின் டிப்பர் லாரிகள் மற்றும் பல தரப்பு கனரக வாகனங்களின் போக்குவரத்து பயன்பாடு அதிகமாக இருப்பதால், உள்ளாவூர் ஏரிக்கரை ஓரம் சாலையில், மரண பள்ளங்கள் உருவாகி உள்ளன.
குறிப்பாக, தார் சாலை சேதம் ஏற்பட்டு, மண் மேடாக காட்சி அளிக்கிறது.
இந்த பள்ளத்தில் ஒரு வாகனம் இறங்கி ஏறினால் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் உள்ளாவூர் - தோண்டாங்குளம் சாலையில் செல்வோர், மரண பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உள்ளாவூர் - தோண்டாங்குளம் இடையே, உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன், சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, பல தரப்பு வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.