மதுரை:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்தரங்கு நடத்த அனுமதி கோரிய வழக்கில் எஸ்.பி.,பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 2018 ல் மூடப்பட்டது.இதனால் பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு உதவிகள் செய்யப்பட்டன. மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. இறை பணியிலும் ஆலை நிர்வாகம் கவனம் செலுத்தியது. தற்போது அப்பணி நடைபெறவில்லை. தவறான பிரசாரம் மூலம் சில விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது. ஆலை மூடப்பட்டது.
ஆலையை திறக்க தற்போது தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர். ஆலை பற்றிய அறிவியல் பூர்வ உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த கருத்தரங்கு நடத்த அனுமதி கோரி துாத்துக்குடி சிப்காட் போலீசாரிடம் மனு அளித்தோம். நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தியாகராஜன் குறிப்பிட்டார்.
நீதிபதி கே.முரளிசங்கர்: துாத்துக்குடி எஸ்.பி.,யிடம் மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து தேவையெனில் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.