----
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: கடலில் பேனா நினைவு
சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், தி.மு.க., பொதுக்கூட்டம் போல
நடத்தப்பட்டது; யாரையும் பேச அனுமதிக்கவில்லை. எந்த வகையிலும் அரசு பணத்தை
விரயமாக்கக் கூடாது. அறிவாலயம் உள்ள இடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்குரியது.
அந்த இடத்தில் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும், பேனா சிலை அமைத்துக்
கொள்ளலாம்.
* டவுட் தனபாலு: உங்க கருத்து நுாற்றுக்கு நுாறு
உண்மை... ஆனா, மெரினா கடற்கரையில, உங்க தலைவி ஜெயலலிதாவுக்கு, 80 கோடி
ரூபாய் அரசு பணத்தை விரயமாக்கி, 'பீனிக்ஸ்' பறவை வடிவத்தில் நினைவிடம்
கட்டிய நீங்க, தி.மு.க., அரசை விமர்சிக்கலாமா என்ற, 'டவுட்' வருதே!
***
அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தமிழக அரசு, கடலில் பேனா நினைவு சின்னம் நிறுவும் இடம் குறித்து, சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறேன்; அங்கு வாழும் மீன்களின் வளம் குறித்தும் கேட்டிருக்கிறேன். மீனவர்கள், மீனவ சங்கங்களின் கருத்துகளையும், நேரடியாக கேட்டு அறிய உள்ளேன். அதன்பிறகு உறுதியாக கருத்து தெரிவிப்பேன்.
* டவுட் தனபாலு: கடலுக்குள் கட்டுமானங்கள் செய்வது, மீன்வளத்தை பாதிக்கும் என்பது பச்சை குழந்தைக்கு கூட தெரிஞ்ச உண்மை... ஒண்ணுக்கு மூணு முறை முதல்வராக இருந்த இவருக்கு, இதுகூட தெரியலையா அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறாரா என்ற, 'டவுட்'தான் வருது!
--------
பத்திரிகை செய்தி: தமிழகத்தில், காவிரி, பவானி, அமராவதி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்ட நதி, அடையாறு, கூவம் ஆகிய ,10 நதிகள் அதிகபட்சமாக மாசடைந்து உள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நதிகளில் மாசு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
* டவுட் தனபாலு: சாய, சலவை, தோல் தொழிற்சாலை முதலாளிகள், தங்களது கழிவுநீர் வடிகால்களா மேற்கண்ட நதிகளை விஷமாக்கி வச்சிருக்காங்க... இனியும், மாநில அரசு சுதாரிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இந்த நதிகள், 'மேப்'ல மட்டும் தான் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!