''அரசு நிதியில ஏகப்பட்ட குளறுபடி செஞ்சிருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''யாருன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, தமிழக அரசு வருஷா வருஷம் ஒதுக்குற நிதி, கல்லுாரி அமைந்திருக்கிற இரும்பாலை பகுதி ஸ்டேட் வங்கி கிளையில, 'டிபாசிட்' ஆகுது... அந்த கிளை மூலமா, எல்லா பரிவர்த்தனைகளும் நடக்குது...
''அந்த நிதியில, மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் ஏகப்பட்ட குளறுபடிகளை செஞ்சிருக்குது... இது சம்பந்தமா, மருத்துவ கல்லுாரியின் அப்போதைய கண்காணிப்பாளர், 17 பக்க அறிக்கையை போன நவம்பர் மாசமே தாக்கல் செஞ்சு, கிடப்புல கிடக்குதுங்க...
''அந்த அறிக்கையில, 2006ல இருந்து 2021 வரையிலான காலகட்டத்துல, வங்கியில அரசு வரவு வச்சதுக்கும், கல்லுாரி கணக்குக்கும் இடையில, 32 லட்சம் ரூபாய் வரை கணக்கு இடிக்கிறதாகவும், அதுக்கான காரணத்தையும் தெளிவா சொல்லியிருக்காருங்க...
''அந்த அறிக்கையை துாசு தட்டி, இப்ப இருக்கிற டீன் விசாரணை நடத்தணும்னு, நேர்மையான டாக்டர்கள் விரும்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சர்ச்சை போஸ்டரை ஒட்டிய காங்கிரஸ் நிர்வாகி மேல வழக்கு போட சொல்லுதாவ வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார், அண்ணாச்சி.
''யாருன்னு சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஜனவரி 30ம் தேதி, மஹாத்மா காந்தி நினைவு தினம் வந்துச்சுல்லா... அன்னைக்கு, 'ஆர்.எஸ்.எஸ்., மதவாதி நாதுராம் கோட்சேவால் தேசத்தந்தை மஹாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம், இவண் காங்கிரசார்' என்ற வாசகத்துடன், சென்னை பூரா போஸ்டர் ஒட்டிஇருந்தாவ வே...
''தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவின் மாநில தலைவர் ரஞ்சன்குமார் தான் இப்படி போஸ்டர் ஒட்டியிருக்காரு... 'மதவாத அரசியல் சர்ச்சையை கிளப்பிய அவர் மேல, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வழக்கு போடணும்'னு, நிஜமான காந்தியவாதிகள் வலியுறுத்துதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''பா.ம.க.,வை கழற்றி விட பாக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''போன, 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., கூட்டணியில பா.ம.க., இருந்துதோல்லியோ... 2021ல் தி.மு.க., ஆட்சியை பிடிச்சதும், பா.ம.க., தலைவர் அன்புமணி வழக்கம் போல, அ.தி.மு.க., தலைவர்களை விமர்சனம் செய்ய ஆரம்பிச்சார் ஓய்...
''இதுக்கு பலனா, பா.ம.க.,வை கூட்டணிக்குள்ள இழுத்து போட, தி.மு.க., தலைவர்கள் சிலர் முயற்சி பண்ணினா... அன்புமணியும் அதுக்கு தானே ஆசைப்பட்டார் ஓய்...
''ஆனாலும், முரசொலி அலுவலக இடத்தின் மூலப்பத்திரத்தை கேட்டு, ராமதாஸ் தந்த குடைச்சலை ஸ்டாலின் இன்னும் மறக்கலையாம்... அதனால, கூட்டணிக்குள்ள அவாளை சேர்க்க அவருக்கு விருப்பம் இல்ல ஓய்...
''இதுக்கு மத்தியில, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்ல, பா.ம.க., ஆதரவு கிடைக்கும்னு பழனிசாமி நம்பிண்டு இருந்தார்... ஆனா, 'யாருக்கும் ஆதரவு இல்லை'னு பா.ம.க., அறிவிச்சுடுத்து ஓய்...
''இதனால கடுப்பான பழனிசாமி, 'இனிமே பா.ம.க.,வை நீங்களும் சேர்க்காதேள்... நாங்களும் சேர்க்க மாட்டோம்'னு, தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் கிட்ட சொல்லியிருக்கார்... அனேகமா, பா.ம.க.,வை ரெண்டு தரப்புமே கழற்றி விட்டுடும் போலிருக்கு ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, சபை கலைந்தது.