வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நிவாரி :மத்திய பிரதேசத்தில், மதுக்கடை முன் பசு மாட்டை கட்டி போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதி, 'மதுவை தவிர்த்து, பசும்பால் அருந்துங்கள்' என வலியுறுத்தினார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மதுவிலக்கை அமல்படுத்த உமா பாரதி போராட்டம் நடத்தி வருகிறார். நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சாவில் உள்ள மதுக்கடை முன், பசுவை கட்டி வைத்து அதற்கு தீவனம் அளித்த உமாபாரதி, அங்கு திரண்ட பொதுமக்களிடம் பேசியதாவது:
![]()
|
பசும்பால் அருந்துங்கள், மது குடிக்காதீர்கள். மாநில அரசு மக்களுக்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக வருவாய் ஈட்டக் கூடாது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தைரியமானவர். தற்போதுள்ள மதுபான கொள்கையில் சில தவறுகள் இருப்பதை ஏற்ற அவர், யோகா குரு பாபா ராம்தேவுடன் கலந்தாலோசித்து, தவறுகளை திருத்தி புதிய கொள்கையை அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த முறை, இதே மதுக்கடை முன் போராட்டம் நடத்தியபோது, உமாபாரதி கடைக்குள் மாட்டுச் சாணத்தை வீசினார் என்பதால், இந்த முறை, விற்பனையாளர் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். உமாபாரதியின் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியை தவிர்த்த சிவ்ராஜ் சிங் சவுகான், ''மக்கள் குடிப்பழக்கத்தை கைவிடும் வகையில், விரைவில் புதிய மதுபானக் கொள்கை கொண்டுவரப்படும்,'' என்றார்.