இலங்கையில், வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், உச்சத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந்த்:
மூன்று வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டை பார்க்க துவங்கி விட்டேன். அப்பவே நான், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகன். அவரை ரசித்து, அவர் மூலமாகவே கிரிக்கெட்டை கற்று வளர்ந்தேன்.
முதலில், 'லெக் ஸ்பின்னராக, லங்கா பிரீமியர் லீக்' தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி, 'ஜாப்னா கிங்ஸ்' அணி, 'சாம்பியன்' பட்டம் வெல்ல காரணமாக இருந்தேன்; இப்போது, இலங்கையை தாண்டி வங்கதேச பிரீமியர் லீக்கிலும் கால் பதித்துள்ளேன்.
'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது ஆசை. 2020லேயே, ஐ.பி.எல்., ஏலத்திற்கு பெயரை பதிவு செய்திருந்தேன்.
தமிழ் பையன் என்பதால், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி' கட்டாயம் வாங்கும் என்று, பலரும் எதிர்பார்த்தனர்; ஆனால், எந்த அணியும் வாங்கவில்லை.
என்னுடன் வேறு இரண்டு தமிழ் வீரர்களும், லங்கா பிரீமியர் லீக்கில் ஆடினர். எங்களை தாண்டியும், இங்கே நிறைய திறமையானவர்கள் இருக்கின்றனர்.
உண்மை என்னவெனில், யாழ்ப்பாணத்திலோ அல்லது தமிழர்கள் வாழும் வேறு பகுதியிலோ, கிரிக்கெட் ஆடி முன்னேறுவது கடினம்.
கொழும்பில் கிரிக்கெட் ஆடி பயிற்சி பெறும் ஒருவரையும், தமிழ் நிலத்தில் பயிற்சி பெறும் ஒருவரையும் ஒப்பிடவே முடியாது.
முதலாவது, மொழி வேறுபாடு; அடுத்ததாக, கொழும்பில் இருக்கும் சவுகரியம் எதுவும், யாழ்ப்பாணத்தில் இருப்போருக்கு கிடைக்காது; பயிற்சியாளர்களும் பெரிதாக இல்லை.
நல்ல உடற்பயிற்சி கூடங்களும் இல்லை. இங்கு பயிற்சி செய்ய, நன்கு பக்குவப்படுத்தப்பட்ட மைதானமும் கிடையாது.
இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து வரும் வீரர், கொழும்பில் அத்தனை சவுகரியத்தையும் அனுபவித்து வரும் வீரரோடு, போட்டி போட்டு முன்னேறுவது கடினம் தான்.
நிறையவே பொறுமை தேவை. நாம் சில கஷ்டங்களை கடந்து தான் வெல்ல வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் தாண்டி வந்து விட்டால், எல்லாரும் இலங்கையர் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதை மறுக்க முடியாது.
இலங்கை கிரிக்கெட் இக்கட்டான காலகட்டத்தில் இருப்பது உண்மை தான். சமீபகாலமாக மீண்டெழ ஆரம்பித்துஇருக்கிறது. எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்.