புதுடில்லி :ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில், அ.தி.மு.க.,வுக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வாய்ப்பாக, இரு தரப்பும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்டி, வேட்பாளரை தேர்வு செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த உத்தரவு, இடைத்தேர்தல் தொடர்பான மனுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்; ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், 'என்னை இடைக்கால பொதுச்செயலராக அங்கீகரித்து, நான் கையெழுத்திடும் வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இம்மனுவுக்கு, தேர்தல் கமிஷன் பதில் அளித்து, மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. இடைத்தேர்தலில், 'வேட்பாளர் பிரதிநிதித்துவம் கட்சிக்கு இருக்க வேண்டும்' என தெரிவித்த நீதிபதிகள், சின்னம் குறித்த நிலை பற்றி தேர்தல் கமிஷன் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தேர்தல் கமிஷன் தரப்பு வழக்கறிஞர், 'கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளோம். கட்சி சின்னம் குறித்து, இங்கு பிரச்னை இல்லை' என்றார்.
பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ''உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், திருத்த விதிகளை தேர்தல் கமிஷன் எடுத்துக் கொள்ளவில்லை. திருத்தங்களுக்கு, உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்கவில்லை,'' என்றார்.
பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'வேட்பாளர் யார் என்பதை, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.
இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை, அ.தி.மு.க., பொதுக்குழு கூடி முடிவு செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேட்பாளரை தேர்வு செய்வதற்கான திட்டத்தை, பொதுக்குழுவில் சுற்றுக்கு விடும்படியும், பொதுக்குழுவின் முடிவை, தேர்தல் கமிஷனுக்கு கட்சியின் அவைத் தலைவர் அனுப்ப வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வேட்பாளர் தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்க, கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் இந்த விஷயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கட்சியில் உள்ள அணியினரின் உரிமையில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், யாருக்கும் கூடுதலாக உரிமை வழங்காத வகையிலும், இடைக்கால ஏற்பாடாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பினர், இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, பொதுக்குழு உறுப்பினர்களிடம், தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக எழுத்துபூர்வ ஒப்புதல் பெற, பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, இன்று ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர்.அதேபோல், பன்னீர் செல்வம் தரப்பில், இன்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இரு தரப்பினரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பது இன்று தெரியும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, பன்னீர்செல்வம் கூறுகையில், ''எங்களை பொறுத்தவரை நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறோம்,'' என்றார்.