மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்றும், தற்போது அமைச்சர்களாக உள்ள மூன்று பேர், கவர்னர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், புதுடில்லியில் நேற்று மாலை மத்திய அமைச்சர்கள் சிலரை, பிரதமர் மோடி தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
வட கிழக்கு மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வை, வரும் 13ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே முடிக்க வேண்டும் என, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கூட்டத் தொடர் முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 10 - 15 தேதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம்.
தற்போது அமைச்சர்களாக உள்ள மூன்று பேர், கவர்னர்களாக நியமிக்கப்படலாம். இந்த பட்டியலில் குறு, சிறு தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானேயின் பெயர் உள்ளதாக தெரிகிறது. மற்றவர்களை பற்றிய தகவல் தெரியவில்லை.
மேலும், புதிதாக யார் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்ற தகவலும் தெரியவில்லை. இது, பிரதமர் மோடிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.இதற்கிடையே, பார்லிமென்டில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த விஷயத்தில் தி.மு.க., - எம்.பி.,க்கள் அடக்கி வாசிக்கின்றனர். சென்னையில் அமையும் விமான நிலையத்தை கட்டமைக்கும் உரிமையை அதானி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதானிக்கு எதிரான விஷயத்தில் அடக்கி வாசிக்கலாம் என தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- புதுடில்லி நிருபர் -