நாளெல்லாம் நல்லநாளே
தைப்பூச விரதமிருப்பவர்கள் அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்குவது நல்லது. விளக்கேற்றி முருகப்பெருமானுக்கு பால், பழம், கந்தரப்பம் படைத்து வழிபட்டால் வாழ்வின் எல்லா நாளும் நல்ல நாளாக அமையும். கந்தர் சஷ்டி கவசம், சண்முக கவசம், 108 முருகன் போற்றிகளை பாடிய பின்பு தீபாராதனை காட்ட வேண்டும். மதியம் சோறும், இரவில் பால், பழமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இரவில் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவது சிறப்பு.
தைப்பூச நாளின் சிறப்பு
சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் மாதம் தை. மகர ராசிக்கு ஏழாவது ராசியான கடகத்தில் சந்திரன் இருக்கும் நாளே தைப்பூசம். இந்த நாளில் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வர். சிவனின் அம்சமாக சூரியனையும், அம்பிகையின் அம்சமாக சந்திரனையும் சொல்வர். இதனால் சிவனும், சக்தியும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ளும் தைப்பூச நாளில் வழிபடுவோரின் விருப்பம் நிறைவேறும்.
சனிக்கும் டாட்டா
செவ்வாய்க்கும் டாட்டாசனி பரிகாரத்தலமாக புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருநள்ளாறு உள்ளது. இங்குதான் நிடத நாட்டு மன்னரான நளனுக்கு சனிதோஷம் நீங்கியது. இதே நாட்டை ஆண்ட மன்னர் நித்தியநாதனும் சனிதோஷத்தால் அவதிப்பட்டார். அவரது கனவில் தோன்றிய சனீஸ்வரர், ''பழநி மலைக்கு வந்து என்னை வழிபட்டால் விமோசனம் தருவேன்” என்றார். அப்படியே தோஷம் நீங்கப் பெற்றார். கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியாக இருப்பவர் முருகன். எனவே சனி, செவ்வாய் தோஷமுள்ளவர்கள் பழநி முருகனை
தரிசித்தால் பிரச்னை விலகும்.
மவுனம் பேசியதே
பழநி முருகன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தாலும், ஆண்டிக்கோலத்தில் கோவணத்துடன் அடக்கமாக அருள்புரிகிறார். அப்போது நம்மிடம், ''மனிதா! என்ன தான் சம்பாதித்தாலும், கடைசியில் மிஞ்சுவது ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட உனக்கு ஏன் இந்த ஆணவம், பணத்திமிர், தற்பெருமை, கர்வம் என வேண்டாத தீயகுணங்கள். வாழும் காலத்தில் பலன் கருதாமல் பிறருக்கு நன்மைகளைச் செய். என்னை நம்பி சரணடைந்திடு. யாமிருக்க பயமேன்'' என சொல்லாமல் சொல்கிறார். இதுவே பழநி முருகனின் மவுனம் சொல்லும் உண்மை.
பழநி வரலாறு
விநாயகருக்கும், முருகனுக்கும் நடந்த போட்டியில் 'அம்மையப்பரே உலகம்' என சிவபார்வதியைச் சுற்றி வந்த விநாயகர் பரிசாக மாங்கனியைப் பெற்றார். மயில் வாகனத்தில் உலகத்தை வலம் வந்த முருகன் பரிசு கிடைக்காததால் தெற்கு நோக்கி புறப்பட்டு நெல்லிவனமான பழநி மலையில் தங்கினார். அங்கு வந்த மகாலட்சுமி, பூமாதேவி, காமதேனு, சூரியன், அக்னிதேவன் ஆகியோர் தவத்தில் ஈடுபட்டு முருகனருள் பெற்றனர். அதனால் இத்தலம் 'திரு ஆவினன்குடி' எனப் பெயர் பெற்றது. 'திரு' என்பது மகாலட்சுமியையும், 'ஆ' என்பது காமதேனுவையும், 'இனன்' என்பது சூரியனையும், 'கு' என்பது பூமாதேவியையும், 'டி' என்பது அக்னிதேவனையும் குறிக்கும். திருஆவினன்குடி கோயிலில் இவர்களுக்கு சன்னதிகள் உள்ளன.
சித்தநாதன் பழநியப்பன்
*பழநிக்கு 'சித்தன் வாழ்வு'. முருகனுக்கு 'சித்தநாதன்' என்றும் பெயருண்டு.
* நவபாஷாணம் என்னும் ஒன்பது மூலிகைகளால் ஆன பழநி முருகனை வடிவமைத்தவர் போகர்.
* மூன்றாம் படைவீடு என பழநியை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிட்டுள்ளார்.
* சேர நாடான கேரளா இருக்கும் மேற்கு திசை நோக்கி முருகன் இங்கிருக்கிறார். சேர மன்னர்கள் பலர் இங்கு திருப்பணி செய்துள்ளனர்.