வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:தற்போது காற்றாலைகளில் இருந்து, 1,000 மெகா வாட் மேல் மின்சாரம் கிடைப்பதால், மின் வாரியத்திற்கு நிம்மதி கிடைத்துள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக காலை, மாலையில் 15 ஆயிரம் மெகா வாட் என்றளவிலும், மற்ற நேரங்களில் 14 ஆயிரம் மெகா வாட்டாகவும் உள்ளது. தற்போது, கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
இருப்பினும், பள்ளி, கல்லுாரிகளில் விரைவில் துவங்க பொதுத் தேர்வுகள் உள்ளிட்ட காரணங்களால், மின் தேவை 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. இதனால், 4,320 மெகா வாட் திறன் உள்ள ஐந்து அனல் மின் நிலையங்களில், 3,900 மெகா வாட் வரை தினமும் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், நிலக்கரி இருப்பு வேகமாக காலியாகி வருகிறது.
கோடையில் அதிகபட்ச மின் தேவை 18 ஆயிரம் மெகா வாட்டை தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 'சீசன்' இல்லாத நிலையிலும், சில தினங்களாக காற்றாலைகளில் இருந்து, 1,000 மெகா வாட் - 1,200 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இது, மின் வாரியத்திற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மே மாதம் முதல் செப்டம்பர் வரை அதிகம் கிடைக்கும் காற்றாலை மின்சாரம், தற்போது 'சீசன்' இல்லாத நிலையிலும் கிடைக்கிறது.
'இந்த மின்சாரம் தொடர்ந்து அதிகம் கிடைக்கும் பட்சத்தில், வரும் நாட்களில் நிலக்கரியை மிச்சப்படுத்த அனல் மின் உற்பத்தி குறைக்கப்படும்' என்றார்.