ஹைதராபாத், பழம்பெரும் தெலுங்கு திரைப்பட இயக்குனர் சங்கரா பரணம் திரைப்படப் புகழ் கே.விஸ்வநாத், 92 வயதில் காலமானார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் வசித்து வந்த பழம்பெரும் இயக்குனர் விஸ்வநாத், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார்.
ஆரம்ப காலங்களில், இணை இயக்குனராகவும், ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றி வந்த விஸ்வநாத், 1965ல் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் முதலில் இயக்கிய ஆத்ம கவுரவம், சிறந்த படம், சிறந்த இயக்குநர் என ஆந்திர மாநில அரசின் இரண்டு நந்தி விருதுகளை பெற்றது.
திரைத்துறையினரால் 'கலா தபஸ்வி' என அழைக்கப்படும் விஸ்வநாத், சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கிய இவர், சில ஹிந்திப் படங்களையும் இயக்கிஉள்ளார்.
குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி, லிங்கா, உத்தம வில்லன் ஆகிய தமிழ் படங்களில் நடித்து உள்ள விஸ்வநாத், இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே, பத்ம ஸ்ரீ ஆகியவற்றுடன் ஐந்து தேசிய விருதுகள், 20 நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுஉள்ளார்.
விஸ்வநாத் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணை ஜனாதி பதி வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழ், தெலுங்கு திரை உலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.