குவஹாத்தி, அசாமில், குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் மாணவர் சங்க தலைவர், எம்.ஏ., தேர்வில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் 2019ல் 'உல்பா' தீவிரவாத அமைப்பினர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர்.
இதில், முக்கிய குற்றவாளிக்கு உதவியதாகக் கூறி, குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் பயின்ற சஞ்சிப் தலுக்தார் என்ற மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவர் சங்கத் தலைவராக இருந்த இவர், சிறையில் இருந்தபடியே அசாம் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமூகவியல் முதுகலை படிப்பு படித்து வந்தார்.
இதற்கான இறுதித் தேர்வில் 71 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த இவர், தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். சிறையில் உள்ள சஞ்சிபிடம், அசாம் மாநில கவர்னர் ஜக்தீஷ் முகி தங்கப் பதக்கத்தை நேற்று முன்தினம் வழங்கினார்.
இது குறித்து இவரது குடும்பத்தினர் கூறுகையில், 'சிறையில் இருந்தபடியே சஞ்சிப் தேர்வெழுதி தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் விடுதலையாகி, பாதியில் விட்ட எம்.பில்., படிப்பையும் இவர் நிச்சயம் முடிப்பார்' என்றனர்.