வேலுார்:'கள ஆய்வில் முதல்வர்' புதிய திட்டப்படி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி விட்ட முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிய, 24 மணி நேரத்துக்குள், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களும், ராணிப்பேட்டை எஸ்.பி.,யும் மாற்றப்பட்டனர்.
'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தில், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை, வேலுாரில், முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் நடத்தினார்.
இந்த கூட்டம் முடிந்து அவர் சென்னை திரும்பிய, 24 மணி நேரத்துக்கு முன் அடுத்தடுத்து, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்துார் மாவட்ட கலெக்டராகவும், திருப்பத்துார் கலெக்டர் அமர்குஷ்வாஹா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர்.
அங்கு இயக்குனராக பணியாற்றிய வளர்மதி, ராணிப்பேட்டை கலெக்டராகவும் நியமித்து அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில், ராணிப்பேட்டை எஸ்.பி., தீபா சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
பின்னணி என்ன?
திருப்பத்துார் கலெக்டராக அமர் குஷ்வாஹா, 2021 ஜூன், 5ல் நியமிக்கப்பட்டார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஊராட்சி, நகராட்சி தலைவர்கள் மற்றும் தி.மு.க., முக்கிய பொறுப்பில் உள்ளவர்களிடம் சட்டப்படி நடந்து கொண்டார்.
கடந்த மாதம் மாவட்டத்தில், 78 கிராம உதவியாளர் பதவிக்கு நேர்காணல் நடந்தது. இதில் ஆளும் கட்சி சிபாரிசுகளுக்கு செவி சாய்க்காமல் நேர்மையான முறையில் நடந்து கொண்டார்.
இதுகுறித்து, தி.மு.க., மாவட்ட செயலரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.,வுமான தேவராஜ் மூலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான வேலுவிடம், ஆளும் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வரின் கள ஆய்வு கூட்டத்துக்கு பின் அவர் மாற்றப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், செப்., 10ல் பதவியேற்றார். அப்போது முதல், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை அனுசரித்து சென்றார்.
புகார் கொடுக்க வரும் பொது மக்களை அழைத்து பேசி, பிரச்னைகளை தீர்த்து வைத்தார். மாவட்ட வளர்ச்சிப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டினர்.
இருந்தும் திருப்பத்துார் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். ராணிப்பேட்டையில் இருந்து இவர் மாற்றப்பட்டது அம்மாவட்ட மக்களுக்கு இழப்பு தான்.
எஸ்.பி.,யும் துாக்கியடிப்பு
இதே போல, ராணிப்பேட்டை எஸ்.பி., தீபா சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.,யாகவும், சென்னை சைபர் பிரிவு துணை கமிஷனர் கிரன் சுருதி, ராணிப்பேட்டை எஸ்.பி.,யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளச்சாராயம், கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலி டாக்டர்களும் அதிகரித்துள்ளனர்.
அரக்கோணத்தில் உள்ள ரவுடிகள், சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், விழாக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார் என்றும், எஸ்.பி., தீபா சத்யன் மீது அடுக்கடுக்காக புகார் எழுந்தது.
அதிர்ச்சி
இது குறித்து எஸ்.பி., தெரிவித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் திடீர் நடவடிக்கை, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.