குவஹாத்தி, குழந்தை திருமணங்களை தடுக்க, அசாம் போலீசார் நடத்திய வேட்டையில், 1,800 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
18 வயது
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு குழந்தை திருமணங்கள் அதிகமாக நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, 14 - 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை திருமணம் செய்வோர் மற்றும் அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வோரை, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க, சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
![]()
|
அதேநேரத்தில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை திருமணம் செய்வோர், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்தவர்கள் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது.
நடவடிக்கை
இதையடுத்து, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த போலீசார் களத்தில் குதித்தனர்.
இது தொடர்பான விசாரணையில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக, 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 1,800 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில், சிறுமியரை, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்திருந்தால், அந்த சிறுவர்களை கைது செய்ய முடியாது. எனவே, அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நான்கு நாட்களுக்கு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.