புதுடில்லி :உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், இந்திய ரொட்டி தயாரிப்பது குறித்த 'வீடியோ' ஒன்றை வெளியிட, அது தற்போது 'வைரல்' ஆகி வருகிறது. சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட இந்த வீடியோவை, வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே, கிட்டத்தட்ட 1.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.
![]()
|
இந்த வீடியோவில், பில்கேட்சுக்கு இந்திய ரொட்டியை தயாரிப்பது குறித்து, அமெரிக்காவின் பிரபல சமையல் கலை வல்லுனரான எய்டன் பெர்நாத் கற்றுக்கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.எய்டன் பெர்நாத், அண்மையில் பீஹாருக்கு வந்திருந்த போது, ரொட்டி தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டிருக்கிறார். அது குறித்த தகவலை பில்கேட்சிடம் அவர் பகிர்ந்து கொள்வதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவில், எய்டன் பில்கேட்ஸிடம்,''நீங்கள் கடைசியாக எப்போது சமைத்தீர்ள்?'' என்று கேட்கிறார். அதற்கு பில்கேட்ஸ், “தினமும் என்னுடைய சூப்பை சூடாக்குவேன்” என்று சிரித்துக் கொண்டே பதிலளிக்கிறார்.இதன் தொடர்ச்சியாக, எய்டன், இந்திய ரொட்டியை தயாரிப்பது குறித்து பில்கேட்ஸுக்கு கற்றுக் கொடுக்கிறார். முடிவில் இருவரும் இணைந்து, ரொட்டியை நெய்யுடன் சேர்த்து ருசித்து சாப்பிடுகிறார்கள்.