புதுடில்லி : 'அதானி' குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், பல்வேறு தர நிர்ணய நிறுவனங்கள், பங்குச் சந்தைகள், அரசு இயந்திரங்கள் போன்றவை இதை ஒவ்வொரு விதமாக அணுகி வருகின்றன.
அதானி குழுமத்தின் முக்கியமான நிறுவனமான 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனப் பங்கு கள் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் 49.60 சதவீதம் அளவுக்கு, அதாவது கிட்டத்தட்ட பாதியளவுக்கு சரிந்துள்ளது.
![]()
|
இதன் தொடர்ச்சியாக, குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டு, போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் 17 இடத்துக்கு சரிந்துள்ளார்.இந்நிலையில் அதானி நிறுவனத்தில் மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் குறித்து, நம்பிக்கையை சில அமைப்புகள் வெளிப்படுத்தி உள்ளன. சில அமைப்புகள் அவநம்பிக்கையை வேறு விதங்களில் தெரிவித்துள்ளன.
எல்.ஐ.சி., முதலீடு
எல்.ஐ.சி., பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், அதானி நிறுவன முதலீடுகள் குறித்து எந்தவித கவலையும் பட வேண்டாம் என, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.மேலும் கூறியுள்ளதாவது:எல்.ஐ.சி., பன்முக முதலீடுகளை கொண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் முதலீடுகளின் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கிறது. எல்.ஐ.சி., சந்தையில் நீண்ட கால முதலீட்டாளராக இருக்கிறது. எனவே கவலைப்படத் தேவையில்லை.
இவ்வாறு கூறியுள்ளார்.அதானி குழுமத்தில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் முதலீடு குறித்து நிதித் துறை செயலர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளதாவது:பொருளாதார நிலைத்தன்மையின் அடிப்படையில் பார்த்தால், எந்த ஒரு நிறுவனத்தின் பங்கும் மிகப் பெரும் அளவில் எந்தவித தாக்கத்தையும் உருவாக்கும் வகையில் இல்லை.
எனவே, இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில், அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும், பங்குகளை வைத்திருக்கும் யாருக்கும் எந்த கவலையும் இல்லை.
மிகப் பெரும் பொருளாதார பார்வையில் பார்த்தால், இது தேநீர் கோப்பையில் ஒரு புயல், அவ்வளவு தான்.இவ்வாறு கூறியுள்ளார்.
'டவ் ஜோன்ஸ்'
'எஸ் அண்டு பி-டவ்ஜோன்ஸ்' நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து பிப்ரவரி 7 முதல், அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான 'அதானி எண்டர்பிரைசஸ்' நீக்கப்படும் என்று 'எஸ் அண்டு பி-டவ் ஜோன்ஸ்' தெரிவித்துள்ளது.அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
'டோட்டல் எனர்ஜிஸ்'
பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான 'டோட்டல் எனர்ஜிஸ்', அதானி நிறுவனத்தில் உள்ள அதன் பங்குகளை மறு மதிப்பீடு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் அதானி நிறுவனங்களில் இந்திய சட்டத்தின் அடிப்படையிலும், நிறுவனத்தின் கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையிலும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனம், 'அதானி டோட்டல் காஸ்' நிறுவனத்தில் 37.4 சதவீத பங்குகளும்; 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் உட்பட மூன்று அதானி குழும நிறுவனங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.இந்த நடவடிக்கை என்பது, சந்தை கண்காணிப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கையாகும். மாறாக, இதை சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது நிறுவனத்திற்கு எதிரான பாதகமான நடவடிக்கையாகக் கருதிவிடக்கூடாது என்கிறார்கள், சந்தை நிபுணர்கள்.
Advertisement